search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கல்லூரி"

    சென்னையில் கல்லூரி மாணவரை கடத்திய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பெண் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத்முகமது (19). தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு நவீத்முகமது வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினர்.

    உயிருக்கு பயந்த மாணவர் அந்த கும்பல் கூறியபடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். அவரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்.

    இரவு 11 மணி அளவில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் வைத்து நவீத்முகமதை சரமாரியாக தாக்கினார்கள்.

    வலி தாங்கமுடியாமல் அவர் கதறினார். ஆனாலும், அவர்கள் விடவில்லை. மாணவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஐபேடு போன்வற்றை பறித்துக்கொண்டு புதரில் தள்ளிவிட்டு சென்றனர்.

    அதிகாலை 4 மணி அளவில் மயக்கம் தெளிந்து நவீத்முகமது முட்புதர் பகுதியில் இருந்து எழுந்து அருகில் இருந்த கடைக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

    கடை ஊழியரிடம் செல்போனை வாங்கி தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தார். 3 பேர் கொண்ட கும்பலால் தாம் கடத்தப்பட்டது குறித்து அவர் கூறியதையடுத்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு அவரது சகோதரர் வந்தார்.

    ரத்த காயங்களுடன் நின்ற நவீத்முகமதை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் சம்பவம் குறித்து டி.பி. சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து கீழ்பாக்கம் உதவி கமி‌ஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீஸ் படை கடத்தல் கும்பலை பிடிக்க விரைந்தனர்.

    சிகிச்சை பெற்று வரும் நவீத்முகமதுவிடம் விசாரித்துவிட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தப்பட்ட பகுதியில் உளவு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

    மாணவரை கடத்தி சென்றது வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் பாட்ஷா, சரவணன் என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை ஒருவரிடம் வாங்கிக் கொண்டு மாணவரை கடத்தி சென்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அமெரிக்காவில் உள்ள இளம்பெண் ஒருவரை நவீத்முகமது காதலித்து வந்ததாகவும் அவர் கடந்த 6-ந்தேதி சென்னை வந்து ஓட்டலில் தங்கி இருந்ததாகவும் அவரை நவீத்முகமது சந்தித்து பேசியபோது இருவரும் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஓட்டலில் தங்கி இருந்த பெண்ணிடம் திடீரென தகராறு ஏற்பட்டதில் ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது நண்பர்கள் மூலம் நவீத்முகமதை கடத்தி தாக்கி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஓட்டலில் தங்கி உள்ள பெண்ணை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணிற்கு நவீத்முகமதுவுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இந்த மோதல் ஏற்பட்டது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள். பிடிபட்ட பாஸ்கர் வடபழனி போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் உறவினர் எனவும் தெரிய வந்துள்ளது.

    ×